on 12/04/2013
நடுத்தர வருமானம் கொண்ட நம் நாட்டில் அதிகரித்து வரும் சனத்தொகைப் பெருக்கமும், நகரமயமாக்கம், கைத்தொழில் மயமாக்கம் என்பவற்றினூடாக அதிவேகமாக மாறுபடத் தொடங்கிய இலங்கையர்களின் வாழ்க்கை முறையினால் அவர்களின் தேகாரோக்கியத்தில் கணிசமான பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாமலுள்ளது.
அரசு சுகாதார துறைக்கு ஒதுக்குகின்ற நிதியில் பெருமளவிலான நிதி தொற்றா நோய்களிற்காகவே செலவிடப்படுகின்றது. அதிகமானவர்கள் நோய் தாக்கத்திற்குட்படும் போது அவர்கள் தொழில் புரியும் நாட்களின் அளவு குறைகின்றது, அதே நேரம் நோய்க்கான மருத்துவச் செலவுகள் அதிகரிக்கின்றன. இந்த நிலை நாட்டின் தேசிய உற்பத்தியில் கணிசமான அளவு வீழ்ச்சியை ஏற்படுத்துகின்றது.
நோய்கள் இருவகைப்படுகின்றன அவையாவன
1) கிருமிகளினால் ஏற்படுத்தப்படுவன – இவை தோற்றும் நோய்கள் Communicable Diseases
2) தொற்றா நோய்கள் - வேறு காரணிகளால் ஏற்படக்கூடியான Non Communicable Diseases
மாறுபட்ட வாழ்க்கை முறையினால் முன்னொருபோதிலும் இல்லாதளவு தொடரா நோய்களின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது. அப்படிக் காணப்படும் நோய்களில்;
- சர்க்கரை வியாதி -Diabetic
- புற்றுநோய் -cancer ,
- முடியுறு நாடியில் ஏற்படும் நோய்கள் -Coronary Artery diseases.
- அதிகரித்த கொழுப்பு / கொலேச்டேரோல் – Hyper lipideamia
- அதிகரித்த குருதியமுக்கம் /மூளைக்கான குருதிக்குளாய்களின் நோய்கள் -Hypertension and Cerebro Vascular Diseases
- நாட்பட்ட சிறுநீரக நோய்கள்-Chronic Kidney Diseases ,
- நாட்பட்ட சுவாசத்தொகுதி நோய்கள்/ Chronic Lung Diseases
ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் தெற்காசிய நாடுகளில் உள்ளவர்கள் 6 வருடங்கள் முன்னராகவே மாரடைப்பு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றது, அந்தவகையில் இலங்கையும் அதிலடங்குகின்றது.
2012ம் வருடத்தின் August மாதம் இலங்கை சுகாதார அமைச்சின் செயலாளர் அவர்களது கருத்துப்படி, இலங்கையில் நிகழும் 65% ஆன மரணங்கள் தொற்றா நோய்களினாலேயே நடைபெறுகின்றன.
வாழ்க்கை முறையினை பாதுகாப்பானதாகவும், சுகாதாரமானதாகவும் மாற்றும்பொழுது இதய நோய்கள் (PRE MATURE HEART DISEASES), சர்க்கரைவியாதி (DIABETES), உயர்குருதி அமுக்கம் (HYPERTENSION), அதனைத்தொடர்ந்து வருகின்ற பக்கவாதம் (STROKE), புற்றுநோய்கள் (CANCERS), நாட்பட்ட சிறுநீரக நோய்கள் போன்றவற்றினை குறைக்க முடியும்.
21 மில்லியன் சனத்தொகையுடைய நம் நாட்டில் ஏற்படும் மரணங்களை ஆய்வு செய்தபோது 39.2% ஆன மரணங்கள் உயர்குருதியமுக்கம் சார்ந்தததாகவும், போதிய உடற்பயிற்சியும், அப்பியாசமும் இன்மை 26%மான மரணங்களிற்கு காரணமாகவும் உள்ளது.
அடுத்ததாக அதிகரித்த உடல் பருமன் (OBESITY) இனால் 21% மானவர்கள் அதன் சார்பான நோய் நிலைகள் மூலம் மரணமடைகின்றனர். 8% மானவர்கள் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதாலும் அது சார்பான பிரச்சினைகளினாலும் மரணமடைகின்றனர். அதேவேளை புகையிலை பாவனையினால் 10.6% மானவர்கள் மரணமடைவதாகவும் தரவுகள் சான்று பகர்கின்றன.
தொடரா நோய்களுக்கான பிரதான காரணங்களாக
- பாதுகாப்பற்ற உணவுப் பழக்க வழக்கங்கள்.
- மதுபாவனை.
- புகைபிடித்தல்.
- அப்பியாசம்/உடல்பயிற்சியின்மை.
போன்றன அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ்வாறு அடையாளம் காணப்பட்டதில் உணவுப் பழக்கத்தினைப்பற்றி நோக்குவோம்
ஒரு மனிதனது அடிப்படை தேவையான உணவானது உடல்வளர்ச்சி, சக்திவளங்குதல், ஆரோக்கியம் பேணல் போன்ற இன்றியமையாத செயல்பாடுகளில் பங்கேற்கின்றது.
உணவுப்பொருட்களில் மாப்பொருள்,புரதம்,கொழுப்பு,விட்டமின்கள் மற்றும் கனியுப்பு என்பன அடங்கியுள்ளது நாமறிந்தவிடயம். மேற்குறித்த செயல்பாடுகள் ஒவ்வொன்றும் குறித்த உணவின் கூறுகளினாலேயே நடைபெறுகின்றன.
அந்த உணவுகளின் பிரதான தொழில்களாக;
- மாப்பொருள் – சக்தியையும், நார்ப்பொருட்களை வளங்கலும்.
- புரதம் – உடல் வளர்ச்சி, பாதுகாப்பு, சிறிதளவு சக்தி வழங்கல்
- கொழுப்பு – சக்தி சேமிப்பும், வழங்கலும்
இம் மூன்று கூறுகளும் மனித உடலியல் தேவைகளை நிறைவுசெய்வதில் பின்னிப்பிணைந்ததது போல விட்டமின்களும் கனியுப்புக்களும் இன்றியமையாததாக உள்ளன.
இன்று நாம் உண்ணும் ஒரு வேளை உணவு அளவிற்கதிகமான மாப்போருளையும், கொழுப்பையும் கொண்டிருப்பதாக இலங்கையின் சுகாதார திணைக்கள அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. அத்துடன் ஒவ்வொரு இலங்கையரும் உள்ளெடுக்கும் உப்பின் அளவும் அதிகரித்துள்ளதாக அது கூறுகின்றது.
இதற்கமைய தொற்றா நோய்கள் அனைத்திற்கும் பிராதான நுழைவாயிலாகவும், ஒத்தாசை புரிவதுமாக உள்ளது நம்மிடத்தில் காணப்படும் உணவுப் பழக்க வழக்கமே என்று கூறமுடியும்.
நமது முன்னோர்கள் உட்கொண்ட உணவுகளையும் அவர்கள் செய்த வேலைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நமக்குத் தெளிவாகவே புரியும் நாம் எதை உண்ணுகின்றோம் என்ன செய்கின்றோம் என்று.
முன்னரிருந்தவர்கள் போன்று இப்பொழுதெல்லாம் மீன்களையோ, பழங்களையோ,மரக்கறிகளையோ,கீரை வகைகளையோ அதிகம் உண்பதற்கு பதிலாக நாம் அதிக மிருக கொழுப்பு, அதிகம் பொரித்த, அதிகம் உப்பும், வேறு இரசாயன சுவை, நிரமூட்டிகளைக்கொண்ட உணவுகளையே கூடுதலாக உண்கின்றோம்.
இவை சுகாதாரத்திற்கு அதிக கேடை விளைவிக்கக்கூடிய உணவுகளாகும். நிரம்பிய கொழுப்புகளை கொண்ட செந்நிற இறைச்சிவகைகள், பால், பாலுட்பத்திப் பொருட்கள், முட்டை மஞ்சட்கரு, ஆட்டிறைச்சி, நண்டு, இறால், உருளைக்கிழங்கு chips, pizza, நெய், வெண்ணெயில் ஊறவைத்தபின் பொறிக்கப்பட்ட POP CORN, பொறித்த உணவுகள், மூளை, குடல், chocolate என்பன உடலின் கொலஸ்ரோல் அளவை அதிகரிப்பதற்கு எதுவாக உள்ளதால் அவற்றை மிக மிகக் குறைந்த அளவிலேயே உள்ளெடுக்க வேண்டும்.
அதிகளவு சக்தியை மட்டும் தரக்கூடிய மாப்பொருளானது மேலதிகமாகும் போது கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேமிக்கப்படுகின்றது. இதனால் உடல் பருமன் அதிகரித்து obesity எனும் நிலை ஏற்படுகின்றது. இவ்வாறு உடல் பருமனானவர்கள் தொடரான உடல்பயிற்ச்சி செய்யத் தவறும்போது அந்தப்பருமன் தொற்றா நோய்களை கைதட்டி அழைத்து தம் உடலினுள் குடியமர்த்துகின்றது.
இனியென்ன நாளைக்கோர் பிரச்சினை வைத்தியசாலைகளுக்கு ஏறி இறங்குவதும், பல்வேறு பரிசோதனைகளுக்கு என்று செலவழிப்பதும், நேரத்தை வீணடித்து, அலைச்சல்களுக்குள்ளாகி,அதன் பலனாக மன உளைச்சலுக்கு உள்ளாகி, இறுதியில் உடல் நலமும் உலனலமும் கெட்டுப்போய் குட்டிச்சுவராகவே போய் விடுவோம்.
எனவே உணவை பொறுத்தவரையில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் ?
- அளவுடன் உள்ளெடுக்கபட வேண்டியவை : வெள்ளைச் சோறு, கிழங்கு வகை, இனிப்புக்கள், சீனி .
- குறைக்க வேண்டியவை : நிரம்பிய கொளுப்புக்கள் உள்ள வெண்ணெய், பாலாடை, ஆடை நீக்காத பால் , உப்பு
- அதிகம் எடுக்க வேண்டியது : பழங்கள், காய் கறிகள்,
- ஓரளவு அதிகம் உள்ளெடுக்க வேண்டியவை : மீன்,அவரை வகைகள், கோதுமை,
போதியளவு நீரருந்துவதும் சுக வாழ்வுக்கு இன்றியமையாத ஒரு விடையமாகும்.
அதுபோல புகத்தலையும், மதுபானத்தையும் ஒருவர் பயன்படுத்தாது இருக்கும்போது தொற்றா நோய்கள் அவரை இலகுவில் அணுக முடியாது.தினமும் அரை மணிநேர உடற்பயிற்சி உடலில் மேலதிகமான சக்தியை எரித்து உடல் தசைகளை வலிமையாக்கி, உடலுக்கு நல்ல வலிமையையயும் சிறந்த தோற்றத்தையும் வழங்குகின்றது.நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!
kattankudi. thanks
மருத்துவ தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. சில தினங்களுக்கு முன் http://www.valaitamil.com/medicine இணையதளத்தை பார்த்தேன். அதிலும் உடல் நலக்குறிப்புகள் அழகாக தொகுக்கப்பட்டிருக்கிறது. நேரம் இருந்தால் நீங்களும் சென்று பாருங்களேன்.
பதிலளிநீக்கு