மாறிவரும் கலாச்சார சூழலில் குழந்தை பெற்றுக் கொள்வதைக்
கூட பாரமாக நினைக்கத் தொடங்கிவிட்டனர் இன்றைய இளைய தலைமுறையினர். திருமணமான தம்பதியர் தங்களுடைய வாழ்க்கையை அனுபவிக்கவேண்டும்
என்று நினைக்கிறார்களே தவிர குழந்தை பெற்றுக்கொண்டு அதற்காக வாழ்க்கையையும்
பணத்தையும் செலவழிக்க வேண்டுமா என்று நினைக்கின்றனர். வீட்டில் துள்ளி விளையாடும்
குழந்தை… கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்தாலும் எளிதில் கிடைக்காத பொக்கிஷம். தவமாய்
தவமிருந்து குழந்தை பெற்ற காலம் போய் இன்றைக்கு நாம் இருவர் இருக்கையில்
நமக்கெதுக்கு இன்னொருவர் என்று கேட்கும் காலம் வந்து விட்டது.
குழந்தை வேண்டாம்
இன்றைய இளம் தலைமுறையினர் பெரும்பாலோனோர் குழந்தை
பிறப்பை தள்ளிப்போடுவதோடு மட்டுமல்லாமல் குழந்தையை பாரமாகவே நினைக்கத்
தொடங்கியுள்ளனர். விளைவு கணவன் மனைவி மட்டுமே பெரும்பாலான குடும்பங்களில் இன்றைக்கு
பொழுதை கழிக்க வேண்டியிருக்கிறது. மும்பை, கொல்கத்தா, டெல்லி போன்ற பெருநகரங்களில்
இந்த புதிய கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது.
பொருளாதார நிலை
மாறிவரும் பணிச்சூழல், குடும்பத்துடன் பொழுதை
கழிக்க நேரமின்மையால் தம்பதியர் ஒருவருக்கொருவர் சந்தித்து கொள்வதே இயலாத
சூழ்நிலையில் குழந்தைவேறு பெற்றுக்கொண்டு அதனை வளர்க்க வேறு நேரம் செலவழிக்க
வேண்டுமா? என்கின்றனர் இளைஞர்கள். மேலும், திடீரென்று ஏற்படும் மணமுறிவு வேறு
குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து அவர்களை யோசிக்கவைக்கிறது. ஏனெனில் விவாகரத்து
பெற்ற பின்னர் குழந்தையை யார் வளர்ப்பது என்பதில் ஒரு சுமை ஏற்படுகிறது என்பதும்
அவர்களின் யோசனைக்கு காரணமாகிறது.
பிஞ்சுக்கரங்கள் வேண்டும்
மனரீதியாகவே குழந்தை வேண்டாம் என்று நினைப்பதால்
ஒருசிலருக்கு இயல்பாகவே குழந்தை பிறப்பதும் தள்ளிப்போகிறது என்கின்றனர்
உளவியலாளர்கள்.
என்னதான் இருவர் மட்டும் ஜாலியாக பொழுதை
கழித்தாலும், வீட்டில் அடுக்கி வைத்த பொருட்களை கலைத்துப்போட பிஞ்சுக்கரங்கள்
வேண்டும். அதுதான் நாம் வாழும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம், வாழ்ந்த வாழ்க்கையின்
அடையாளம் என்பதே உளவியலாளர்களின் கருத்தாகும்.
thaaitamil thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக