கர்ப்ப காலத்தில் முட்டை சாப்பிடுவது, சிசுவின்
ஆரோக்கியத்துக்கு நல்லது. எதிர்காலத்தில் பல நோய்களில் இருந்து பாதுகாப்பு
அளிக்கிறது என்று லேட்டஸ்ட் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. கர்ப்பிணிகளின் டயட்
தொடர்பாக அமெரிக்காவின் இதாகா நகரில் உள்ள கார்னெல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்
மேரி காடில் தலைமையில் சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நிறைமாத கர்ப்பிணிகள் மற்றும் ஏழு மாத, எட்டு மாத
கர்ப்பிணிகள் 24 பேர் ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர். முட்டையில் உள்ள கோலைன்
சத்து 480 மி.கி. அல்லது 930 மி.கி. அளவுக்கு கிடைக்கும் வகையில் தினமும் முட்டை
சாப்பிடுமாறு கூறப்பட்டது. பிரசவம் வரை அவர்கள் முட்டை சாப்பிட்டு வந்தனர். ஆய்வில்
தெரியவந்த தகவல் குறித்து மேரி காடில் கூறியதாவது: கர்ப்ப காலத்தில் இயல்பாகவே
தாய்மார்கள் அதிக டென்ஷனுடன் இருப்பார்கள். ஒருவித மன அழுத்தம், இறுக்கம், குழந்தை
நல்லபடியாக பிறக்குமா என்ற பயத்துடன் காணப்படுவார்கள். அதிகப்படியான பயம், மன
அழுத்தம் ஆகியவை தாய்க்கு மட்டுமின்றி, வயிற்றில் இருக்கும் சிசுவையும் பாதிக்கும்.
மேலும், கர்ப்ப காலத்தின்போது, கார்டிசால் சுரப்பு குறைந்தால் தொப்புள்கொடி
பாதிக்கப்படும். சிசுவுக்கு முறையாக சத்துகள் கிடைக்காது.
முட்டை அதிகம் சாப்பிடுவதால், கார்டிசால் சுரப்பு
சீராகிறது. இதனால், பல பாதிப்புகள் தவிர்க்கப்படுகிறது. கருவில் உள்ள சிசுவின்
ஆரோக்கியமான வளர்ச்சிக்கு முட்டையில் உள்ள கோலைன் முக்கிய பங்காற்றுகிறது. சிசுவின்
நியூரோ எண்டோகிரைன் சுரப்பு சீராகிறது. ஆரோக்கியமான மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.
இதனால் வாழ்நாள் முழுவதும் மூளையின் நினைவாற்றல் மற்றும் கற்கும் திறன் சிறப்பாக
இருக்கும். எதிர்காலத்தில் ரத்தஓட்டம், டென்ஷன், சர்க்கரைநோய் உள்ளிட்ட பாதிப்புகள்
வராமலும் தடுக்கிறது. அது மட்டுமின்றி, கர்ப்ப காலத்திலும் பிரசவத்தின்போதும்
தாய்க்கு நோய்த் தொற்று ஏற்படாமல், வருங்காலத்தில் மார்பகப் புற்றுநோய் வராமலும்
கோலைன் காப்பாற்றுகிறது. ஒரு முட்டையில், முக்கியமாக மஞ்சள் கருவில் 125 மி.கி.
அளவுக்கு கோலைன் பொருள் உள்ளது. இதுதவிர புரதம், இரும்புசத்து, ஃபோலேட் உள்ளிட்ட பல
சத்துகள் முட்டையில் உள்ளதால், கர்ப்பிணிகள் நிறைய சாப்பிடலாம்.
links.lankasri. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக